Thursday, 31 March 2016

மௌனம்


உலகில் சிறந்ததை உனக்காய் பரிசளிக்க
நிழலாய் தொட
ரும் நெடுநாள் வலியாய்
நான் மட்டும் இரசித்திடும் கவிதையே
உன் முன்னே பொம்மை கேட்கும் குழந்தையாய்

பிரபஞ்சமே நீயென உன்மேல் காதல்
சொல்லாத காரணங்கள் புரியாத விதிகள்
வாழ்க்கை முழுதும் உன்னுடன் கழிக்க
ஆசைகள் இருந்தும் அனுமதி இல்லை

தலை மேலே பூமி தெரிய
தலைகீழாய் நானும் எரிய
ஆசைகள் சொல்ல பாசைகள் இருந்தும்
மௌனம் மட்டும் சாதிப்பதேன்
என்னவளே?

Tuesday, 22 March 2016

தண்ணீர்

பூமி பரப்பில் மூன்றில் இரண்டு 
மனித உடலில் அரைக்கு மேல்
பல உயிரினங்களின் இருப்பிடம்
மனித உயிரின் பிறப்பிடம்

பொழியும் மழையாய் நகரும் நதியாய்
தேங்கிய கடலாய் உருகும் பனிப்பாறையாய்
உலகமே உயர்வாய் அறிந்து வியக்கும்
அனைத்திலும் உள்ள அகில கரைப்பான்

தவிக்கும் வாய்க்கு தண்ணீர்
பொழியும் வரை காத்திருக்க
சக்கரவாகப் பறவை இல்லை
சற்றும் பொறுக்கா மீன்கள்

புவியிலும் சரி செவ்வாயிலும் சரி
சுன்னாகத்திலும் சரி சுவிற்சர்லாந்திலும் சரி
உணவு உடை உறையுள் மட்டுமல்ல
அகில அடிப்படைத் தேவை தண்ணீரே

Thursday, 10 March 2016

ஸ்பரிசம்


பத்து மாத அருந் தவம்
பாடுபட்டு பெற்ற வரம்
மூக்குமுழி அழகு முகம்
யாரைப் போல விவாதம்

துயில் கொள்ள தொட்டில்
அன்னை மடி சூட்டில்
பராக்கு காட்ட மாய ஜாலம்
பெயர் சூட்ட எண் கோலம்

தலைமுறை வளர்க்க பிள்ளை
தனி இல்லை என்ற தலைக்கனம்
பிள்ளை பெற்ற அன்னைக்கே
தனியே உற்ற இலக்கணம்

அன்னை மட்டும் தொடர்பாடல்
அறிந்த மொழி அழுகூவல்
துயில்கொள்ள மணி ஈரெட்டு
விழித்தால் பாலூட்டி தாலாட்டு

தெறிவினை எனும் மருத்துவம்
இந்த பாமகன் கண்களுக்கோ
உயிர் தந்த அன்னை நீயென
ஒற்றை விரல் பற்றும் சிற்றுயிர்